Monday, May 28, 2018

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை
தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை 

Wednesday, April 11, 2018

யார் கடவுள் - திருக்குறள்

திருவள்ளுவர் யார் கடவுள் என்பதற்கு கீழ்கண்ட குணம் உள்ளவனே கடவுள் என்கிறார்.

  • வாலறிவன் - தூய அறிவு உடையவன் 
  • மலர் மிசை ஏகினான் - மலர் போன்ற மனதில் இருப்பவன் 
  • வேண்டுதல் வேண்டாமை இலான் - விருப்பு வெறுப்பு இல்லாதவன் 
  • தனக்கு உவமை இல்லாதான் - தனக்கு இணை இல்லாதவன் (ஒன்றாக இருப்பவன்)
  • எண்குணத்தான் - எட்டு குணங்கள் உடையவன் (தன்வயம் ஆதல், தூய உடல், இயற்கை உணர்வு ஆதல், முற்றும் உணர்தல், பாசங்களில் இருந்து  நீங்குதல், பேரருள் உடைமை , முடிவில்லாத ஆற்றல் உடைமை,வரம்பு இல்லா இன்பம் உடைமை )
  • பகவன் - பகுத்து காப்பவன் 
  • இறைவன் - (எங்கும்) தங்கி இருப்பவன் 
  • பொறிவாயில் ஐந்து அவித்தான் -(ஐம்புலன்களால் எழும் ஆசை)ஆசை இல்லாதவன் 
  • அறவாழி அந்தணன் - அற கடலாக விளங்கும் சான்றோன் 


Tuesday, April 10, 2018

கடவுள் உன் உள்ளத்தில் இருக்கிறான் - சிவவாக்கியர்


நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறி சுவை அறியுமோ

ஓசை உள்ள கல்லை நீ உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல் சொல்லுமே 

Monday, March 26, 2018

காவிரி ஆற்றின் மேன்மை - பட்டின பாலை

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் சோழ நாட்டை பாடிய பாடல்.

பாடல்:
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்

விளக்கம் :
குற்றம் இல்லாத புகழுடன் விளங்கும் வெள்ளி என்ற விண்மீன் திசை மாறி தெற்கு நோக்கி சென்றாலும், நீர்துளியை உணவாக உண்ணும் வானம்பாடி என்ற பறவை வருந்த புயல் மாறி வானம் மழை பெய்யாவிட்டாலும் தான் பொய்யது மலையில் தொடக்கி கடலில் முடியும் காவிரி. அது தன நீரை பரப்பி மண்ணை பொன்னாக ஆக்கும் .

Wednesday, March 14, 2018

பண்டமாற்று - உப்புக்கு நெல் - பட்டினப்பாலை

குறும்பல்லூர் நெடுஞ்சொணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய் பஃறி 
பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை

சிறிய பல ஊர்கள் நிறைந்த பெரிய சோழ நாட்டில் வெள்ளை உப்பின் விலையை கூறி பண்டமாற்றாக பெற நெல் ஏற்றி வந்த படகுகள் பண்ணையில் கட்டப்பட்ட குதிரைகளை போல கரையில் பிணைக்கபட்டிருந்தன.உப்பங்கழி சூழ்ந்த தோப்புகளும் பக்கத்தில் பூஞ்சோலைகளையும் இருந்தன.

இவ்வாறு உப்பு வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு மக்கள் இப்போது கடலுப்பு கிடைக்காமல் தொழிற்சாலை கழிவு உப்பை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் வளர்ச்சி என்ற பெயரில்.

Monday, March 12, 2018

பணத்தின் பயன் - புறநானுறு

பணத்தின் பயன் பற்றி மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடிய புறநநானுற்று பாடல் (பாடல் எண் :189).

பாடல்:

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்க்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்குமே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

விளக்கம்:
தெளிந்த கடலால் சூழப்பட்ட எல்லாருக்கும் பொது என்று இல்லாமல் வெண்குடை நிழலில் ஒருவனே ஆளும் அரசனுக்கும் ,நடு இரவிலும் பகலிலும் தூங்காமல் விரைந்து செல்லும் விலங்குகளை வேட்டையாடும் கல்வி அறிவு இல்லாத மனிதனுக்கும், உண்பதற்க்கு தேவை ஒரு நாழி அளவு உணவும் அணிவதர்க்கு இரண்டு ஆடைகளுமே .மற்ற தேவைகளும் இருவர்க்கும் சமமே. செல்வத்தின் பயனே பிறருக்கு கொடுப்பது ஆகும். தானே அனுபவிக்கலாம் என்று நினைப்பவர்கள் பலவற்றை தவற விடுவார்கள்.

Friday, March 9, 2018

நாடு செழிப்படைய - புறநானுறு

பொன்முடியார் பாடிய புறநானுற்று பாடல்(பாடல் எண் : 312).

நாடு செழிக்க ஒவ்வொருவரும் தன கடமையை செய்ய வேண்டும் என்று ஒரு பெண் பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது .

பாடல்:
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல்வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே

விளக்கம்:
குழந்தையை பெற்று வளர்த்து தருவது எனது முதல் கடமை
சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை
வேல் செய்து கொடுப்பது கொல்லனின் கடமை
நல்ல குணங்களை கற்பிப்பது அரசனின் கடமை
ஒளிரும் வாழ் கொண்டு போர் செய்து யானையை கொன்று வெற்றியுடன் திரும்புவது காளை போன்ற இளைஞனின் கடமை   

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை