Monday, March 26, 2018

காவிரி ஆற்றின் மேன்மை - பட்டின பாலை

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் சோழ நாட்டை பாடிய பாடல்.

பாடல்:
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்

விளக்கம் :
குற்றம் இல்லாத புகழுடன் விளங்கும் வெள்ளி என்ற விண்மீன் திசை மாறி தெற்கு நோக்கி சென்றாலும், நீர்துளியை உணவாக உண்ணும் வானம்பாடி என்ற பறவை வருந்த புயல் மாறி வானம் மழை பெய்யாவிட்டாலும் தான் பொய்யது மலையில் தொடக்கி கடலில் முடியும் காவிரி. அது தன நீரை பரப்பி மண்ணை பொன்னாக ஆக்கும் .

Wednesday, March 14, 2018

பண்டமாற்று - உப்புக்கு நெல் - பட்டினப்பாலை

குறும்பல்லூர் நெடுஞ்சொணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய் பஃறி 
பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை

சிறிய பல ஊர்கள் நிறைந்த பெரிய சோழ நாட்டில் வெள்ளை உப்பின் விலையை கூறி பண்டமாற்றாக பெற நெல் ஏற்றி வந்த படகுகள் பண்ணையில் கட்டப்பட்ட குதிரைகளை போல கரையில் பிணைக்கபட்டிருந்தன.உப்பங்கழி சூழ்ந்த தோப்புகளும் பக்கத்தில் பூஞ்சோலைகளையும் இருந்தன.

இவ்வாறு உப்பு வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு மக்கள் இப்போது கடலுப்பு கிடைக்காமல் தொழிற்சாலை கழிவு உப்பை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் வளர்ச்சி என்ற பெயரில்.

Monday, March 12, 2018

பணத்தின் பயன் - புறநானுறு

பணத்தின் பயன் பற்றி மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடிய புறநநானுற்று பாடல் (பாடல் எண் :189).

பாடல்:

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்க்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்குமே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

விளக்கம்:
தெளிந்த கடலால் சூழப்பட்ட எல்லாருக்கும் பொது என்று இல்லாமல் வெண்குடை நிழலில் ஒருவனே ஆளும் அரசனுக்கும் ,நடு இரவிலும் பகலிலும் தூங்காமல் விரைந்து செல்லும் விலங்குகளை வேட்டையாடும் கல்வி அறிவு இல்லாத மனிதனுக்கும், உண்பதற்க்கு தேவை ஒரு நாழி அளவு உணவும் அணிவதர்க்கு இரண்டு ஆடைகளுமே .மற்ற தேவைகளும் இருவர்க்கும் சமமே. செல்வத்தின் பயனே பிறருக்கு கொடுப்பது ஆகும். தானே அனுபவிக்கலாம் என்று நினைப்பவர்கள் பலவற்றை தவற விடுவார்கள்.

Friday, March 9, 2018

நாடு செழிப்படைய - புறநானுறு

பொன்முடியார் பாடிய புறநானுற்று பாடல்(பாடல் எண் : 312).

நாடு செழிக்க ஒவ்வொருவரும் தன கடமையை செய்ய வேண்டும் என்று ஒரு பெண் பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது .

பாடல்:
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல்வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே

விளக்கம்:
குழந்தையை பெற்று வளர்த்து தருவது எனது முதல் கடமை
சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை
வேல் செய்து கொடுப்பது கொல்லனின் கடமை
நல்ல குணங்களை கற்பிப்பது அரசனின் கடமை
ஒளிரும் வாழ் கொண்டு போர் செய்து யானையை கொன்று வெற்றியுடன் திரும்புவது காளை போன்ற இளைஞனின் கடமை   

Thursday, March 8, 2018

மக்களின் இயல்பே நாட்டின் இயல்பு - புறநானுறு

ஒளவையார் பாடிய பாடல் (புறநானுறு:187) :

பாடல்:
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்வழி ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே

விளக்கம்:
நாடு என்ற ஒன்றாகவோ காடு என்ற ஒன்றாகவோ, பள்ளம் என்ற ஒன்றாகவோ, மேடு என்ற ஒன்றாகவோ,எப்படி இருந்தாலும் ஆண்கள் நல்ல வழியில் செல்பவர்களாக இருந்தால் நீயும் நலமுடன் வாழ்வாய், நிலமே!

Wednesday, March 7, 2018

பல்லுயிர் பகுப்பு- தொல்காப்பியம்


ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

விளக்கம்:

ஓரறிவு உயிர் என்பது உடலால் உணர்வது
இரண்டறிவு உயிர் என்பது உடல் மற்றும் வாயினால் அறிவது
மூன்றறிவு உயிர் என்பது உடல், வாய் மற்றும் மூக்கால் அறிவது
நான்கறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது
ஐந்தறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண், காது இவற்றால் அறிவது
ஆறறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண், காது, மனம் இவற்றால் அறிவது
இதை நேராக கண்டு உணர்ந்தவர்கள் வகை படுத்தி இருக்கிறார்கள்

Tuesday, March 6, 2018

நல்லதும் கெட்டதும் - புறநானூறு

கணியன் பூங்குன்றன் எழுதிய புறநானுறு (பாடல் எண் : 192) பாடல்.

யாது ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா தென்றலும் இலமே ; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழி படுஊம் புணைபோல, ஆருயிர்
முறைவழி படுஊம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே;

விளக்கம்:

எல்லா ஊரும் நம் ஊரே. எல்லோரும் நம் உறவினர்களே . கெட்டதும் நல்லதும் பிறரால் வருவதில்லை. நொந்துபோவதும் அதிலிருந்து விடுபடுவதும் அவ்வாறே . சாவது புதிய செய்தி அல்ல . வாழ்வதே இனிமை என்று மகிழ்வதும் இல்லை. வாழ்தல் இனிமையற்றது என்று வெறுப்பதும் இல்லை . மின்னலொடு வானம் குளிர்ந்த மழை பெய்வதால் இடைவிடாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தில் செல்லும் மிதவை போல நம் அறிய உயிரானது முறையாக சென்று கரை சேரும் என்பதை துறவிகள் வழியாக தெரிந்துகொண்டோம் . அதனால் செல்வத்தால் பெரியவர்களை மதிப்பதும் இல்லை. சிறியவர்களை இகழ்வதும் இல்லை 

Friday, March 2, 2018

ஆளுமை வளர்ச்சி - புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடி என்பது பாரதியார் குழந்தைகளுக்காக பாடிய பாடல். இதில் ஒருவர் எந்த மாதிரி ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இது குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பொருத்தமானவை.

தமிழ்  உயிர் எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட 12 வரிகளை கொடுத்துத்துள்ளேன்,.

  1. அச்சம் தவிர்
  2. ஆண்மை தவறேல்
  3. இளைத்தல் இகழ்ச்சி
  4. ஈகை திறன்
  5. உடலினை உறுதி செய்
  6. ஊண் மிக விரும்பு
  7. எண்ணுவது உயர்வு
  8. ஏறு போல் நட
  9. ஐம்பொறி ஆட்சி கொள்
  10. ஒற்றுமை வலிமையாம்
  11. ஓய்தல் ஒழி
  12. ஒளடதம் குறை
இதற்கான விளக்கம் :
  1. பயப்படாதே 
  2. மன வலிமையை இழக்காதே 
  3. பின்னடைதல் இகழ்ச்சிக்கு உரிய செயல் 
  4. மற்றவர்களுக்கு கொடுத்து உதவு 
  5. உடலை உறுதியாக வைத்துக்கொள் 
  6. உணவை விரும்பு சாப்பிடு 
  7. எண்ணம் உயர்வாக இருக்கட்டும் 
  8. தலை (காளை மாடு போல) நிமிர்ந்து நட 
  9. கண் , காது , மூக்கு , வாய் , தோல் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வை 
  10. அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதே வலிமை 
  11. சோர்வாக இருக்காதே 
  12. மருந்தை நாடுவதை குறைத்துக்கொள் 

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை