Tuesday, March 6, 2018

நல்லதும் கெட்டதும் - புறநானூறு

கணியன் பூங்குன்றன் எழுதிய புறநானுறு (பாடல் எண் : 192) பாடல்.

யாது ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா தென்றலும் இலமே ; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழி படுஊம் புணைபோல, ஆருயிர்
முறைவழி படுஊம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே;

விளக்கம்:

எல்லா ஊரும் நம் ஊரே. எல்லோரும் நம் உறவினர்களே . கெட்டதும் நல்லதும் பிறரால் வருவதில்லை. நொந்துபோவதும் அதிலிருந்து விடுபடுவதும் அவ்வாறே . சாவது புதிய செய்தி அல்ல . வாழ்வதே இனிமை என்று மகிழ்வதும் இல்லை. வாழ்தல் இனிமையற்றது என்று வெறுப்பதும் இல்லை . மின்னலொடு வானம் குளிர்ந்த மழை பெய்வதால் இடைவிடாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தில் செல்லும் மிதவை போல நம் அறிய உயிரானது முறையாக சென்று கரை சேரும் என்பதை துறவிகள் வழியாக தெரிந்துகொண்டோம் . அதனால் செல்வத்தால் பெரியவர்களை மதிப்பதும் இல்லை. சிறியவர்களை இகழ்வதும் இல்லை 

No comments:

Post a Comment

மொழி பற்று

பீகாரில் பிஹாரி மொழி இருக்க ஹிந்தி பேசினால் பெருமை தமிழ்நாட்டில் தமிழ் மொழி இருக்க ஆங்கிலம் பேசினால் பெருமை